ஓரு ஆசிரியர் கட்டுரையும் என் புலம்பலும்...

முதலில் ஆசிரியர் கட்டுரை...
Posted on: 2008-04-01

பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை

உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படும் அவலங்களையும் கேக், பாண் போன்றவற்றின் பெறுமதிகளையும் அறியாதவனாக.அதுபோல, இலங்கை அரசின் மோசமான அரசாட்சி முறைமையினாலும், திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல், மோசடிகளினாலும் நாட்டின் பொருண்மிய நிலைமை நலிவுற்று, அப்பாவி மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் நேர்ந்திருக்கிறது. இச்சமயத்தில் "கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதை விடுத்து அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள்!' என்று விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்துக் கோரிக்கை விடுக்கிறார் இலங்கையின் அமைச்சர் ஒருவர்.அதுவும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இப்படிக் கணக்கு வழக்குப் புள்ளி விவரங்களுடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்று லூயி மன்னன் கூறியமை போன்று ""பாண், றொட்டி போன்றவை விலை கூடவென்றால் அரிசியில் தயாரான சோற்றைச் சாப்பிடுவது மலிவானது!'' என்று குறிப்பிட்டுக் கணக்கு வேறு காட்டி யிருக்கின்றார் விட்டிருக்கின்றார் அவர்.உலக சந்தையில் கோதுமை மாவின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதால் தாம் முன்னர் ஒரு தடவை ஆரூடம் கூறியமை போன்று ஓர் இறாத்தல் பாணின் விலை விரைவில் நூறு ரூபாவானாலும் ஆச்சரியப்படுவதற்கே இடமில்லை என்றும் அப்படியாவதை ஒருவராலுமே தடுத்துவிட முடியாது என்றும் வெகு "சிம்பிள்' ஆகக் கூறியிருக்கின்றார் அவர்.அவரது பேச்சையும், கணக்குக் காட்டும் திறனையும் நோக்கும்போது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டியபடி, பட்டினி அவலத்தைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுத் திணறிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பாமரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.அரிசியின் விலையும் உயரப் பறந்துகொண்டிருக்கின்றது. தேங்காயின் விலையும் தென்னை மர உச்சியையும் தாண்டி உயர்ந்துவிட்டது. சோறு சமைப்பதற்கான எரிபொருள், எரிவாயு அல்லது விறகின் விலைகளும் எகிறிவிட்டன.இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாண் வாங்கிச் சாப்பிடுவதை விட, அரிசியைச் சோறாக்கி, தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடுவது மலிவானது என்று கூறி மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி, வசவை வாங்கிக்கட்டிக் கொள்கிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.இலங்கை மேலும் மேலும் வறுமைக்குள் நீண்ட கால அடிப்படையிலும், குறுகிய காலச் செயற்பாட்டிலும் பின்னடைவுக்குள் மூழ்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை ஆசிய, பசுபிக் சமூக ஆய்வறிக்கை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.வறுமையை ஒழிப்பதிலும், பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதிலும், மோசமான யுத்தங்கள் மற்றும் அழிவுகள், மோதல்களில் இருந்து மக்களை மீட்பதிலும் கொழும்பில் மாறி மாறி வரும் அரசுகளுக்குத் திறமையோ, திராணியோ, தகுதியோ இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுப் போக்குகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.பாணின் விலை விரைவில் நூறு ரூபாவாவதை யாராலுமே தடுக்க முடியாது என்று கைவிரிப்பதைப்போல நுகர்வோர் விவகார அமைச்சரே உறுதிப்படுத்துகின்றமை கொழும்பு அரசின் திறமையின்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றமையே இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்குக் காரணம் என இலங்கை அரசு கூறும் சமாளிப்புகள் அப்பட்டமான பொய் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.நல்லாட்சிக்கான அரசு ஒன்று கொழும்பில் ஏற்படாதவரை இனப்பிணக்கையும், பூசலையும், பேரினவாத வெறியையும், யுத்தத் தீவிரத்தையும் வளர்த்து, அதில் அரசியல் ஆதிக்கக் குளிர்காயும் தற்போதைய தலைமைகள் மாறும்வரை இத்தகைய பொருளாதாரப் பாதிப்புப் படுகுழியில் இருந்தும் நாடு விடுபடுவது துர்லபமே.

இலங்கையின் பத்திரிகை ஓன்றின் ஆசிரியர் கட்டுரையாக வெளி வந்திருந்தது மேலே இருக்கிற விடயம் ...

அப்பாடா ஒரு வழியா இதையும் எழுதிவிட்டியள் என..., குறை நினையாதையுங்கோ நான் கிரமமாக உங்கடை செய்திகளை படிக்கிறயில்லை அதாலைதான் இப்படிச்சொல்கிறேன்.

இனி என் புலம்பல் இலங்கையின் சகோதரங்களுக்கு...

பொருளாதார பின்னடைவுக்கு என்ன காரணம் எண்டு நல்லா தெரியும்தானே பிறகென்ன கறுமத்துக்கு திரும்பவும் அதுக்குள்ளையே கிடந்து அழுகிறியள் வெளிலை வந்து உலகத்தை பாருங்கோவனப்பா... உலகம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கு எண்டு, சும்மா செக்கு மாடு மாதிரி அதுக்குள்ளையே இருந்து அது சரியில்லை இது சரியில்லை எண்டுறதை விட நீங்கள் சிலதை செய்து பாக்கலாம் தானே?

இவ்வளவு காலம் அனுபவிச்ச உங்களுக்கே இன்னமும் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியல்லை எண்டால் அந்த அமைச்சருக்கு என்ன விளங்கும் பதவியும், சொல்லுறதுக்கான் தைரியமும் இருக்கேக்க அவர் எதையாவது சொல்லத்தான் செய்வார். ஊரில அதானே நடக்குது நீங்கள், எல்லாம் எப்ப உங்கடை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறியள் படிச்சா மட்டும் போதுமே ... அவர் இது சொல்லுறார், இவர் இது சொல்லுறார் எண்டு கதைக்கத்தான் சரி அல்லது ஆராவது ஒருத்தருக்கு பின்னால இருக்கத்தான் சரி அதுவும் இல்லையெண்டால் எங்கயாவது ஓடத்தப்பி ஒரு போர்வையோட ஒளிஞ்சு கொண்டு வால்பிடிக்கத்தானே தெரியும்...உண்மையா என்ன நடக்குது எண்டு தெரிஞ்சு கொள்கிற பழக்கமுமில்லை தெரிஞ்சாலும் அதை சொல்லுற தைரியமும் இல்லை,பிறகெதுக்கு எங்கடை ஆக்கள் அப்பிடி இருந்தினை இப்பிடி இருந்தினை எண்டு சவடால் கதைக்கிறியள் ...

நாட்டில இருக்கிற குழப்பம் தேவையில்லாதது எண்டு தெரியுதல்ல்லோ இப்பிரச்சனைகள் எல்லாத்துக்கும் காரணம் சுய லாபம் கொண்ட அரசியலும், தகுதியற்ற தலைமைகளும் தான் எண்டு தெரியுதல்லோ பிறகேன் உப்பிடியே இருக்கிறியள். வாழ்க்கையில வெளிநாட்டுக்கு போறயில்லை எண்டிருந்த பல தெற்கிலங்கை சுகோதரங்களும் 400 றியால் சாசுக்கு சவுதிக்கு போகுதுகள் நாட்டில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது ஆனா பேரினவாதம், யுத்தம், ஊழல், கேவலங்கெட்ட அரசியல், நரிக்குலத் தலைமைகள் என்று கண்ட கழிவுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியுது என உங்களுக்கு... எனக்கு வர்ற வேகத்துக்கு இனி இப்பிடி எழுதமாட்டன் ஓ... சொல்லிப்போட்டன் அப்பவும் நினைக்கிறனான் என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இதிலை எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு ஏனெண்டால் நான் இன்னொரு வலைப்பதிவு வச்சிருக்கிறன் பாருங்கோ... சரி அதை விடுவம் இப்ப இதை முடிப்பம்...

ஒரு காலத்திலயும் உது நடக்காது, முடிஞ்சால் உங்களை நீங்கள் மாத்திக்கொள்ளுங்கோ நாடு தன்னால மாறும் ஒவ்வொரு தனி மனிசனும் சேர்ந்துதான் ஒரு குடும்பம், ஓவ்வொரு குடும்பமும் சேர்ந்துதான் ஒரு ஊர், ஒர்வொரு ஊரும் சேர்ந்துதான் ஒரு நாடு; இது அடிப்படை தெரியுந்தானே... வீட்டுக்கொருத்தர் மாறுங்கோ நாடு தன்னால மாறும் சும்மா வெளிநாட்டுக்கு போறதும் அவை அங்க படங்காட்டுறதும் வர்ற காசிலை பாதி வயித்தை கழுவிக்கொண்டு சாத்தின கதவுக்குள்ளை இருந்து கதைக்குறதுக்கும் பெயர் வாழ்க்கை இல்லை.

நான் இதை சொல்லுறது இந்த பதிவை வாசிக்கத் தெரிஞ்ச சகோதரங்களுக்கு மட்டும் கிடையாது, விசயத்தை விளங்கி கொள்ளத்தெரிஞ்ச எல்லா சகோதரத்துக்குந்தான். இலங்கையை பொறுத்த மட்டில ராணுவம் எண்டுறது நாட்டுக்கு வெளியில மடடும் தேவையான ஒண்டெண்டுதான் நான் சொல்லுவன், நாட்டுக்குள்ள எவர் ஆயுதம் வச்சிருந்தாலும் அது அவர் அவற்றை பயத்திலையும், தவறுகளை மறைக்கவும், சுய லாபத்துக்காகவும் தான் என்பது என் கருத்து. வன்முறை எண்டுற கொடுமையால எதையும் சாதிக்க முடியாது. அற்புதமான தீவு, வாழுறதுக்குரிய எல்லாம் இருக்கு ஆனா வாழத்தான் தெரியயில்லை எங்கடை கறுமங்களுக்கு!

பாணைப்பற்றி கதைக்கேக்கை ஆது சம்பந்தமா நான் மனசில நினைக்கிற விசயங்கள் கனக்க அது இன்னொரு பதிவில சொல்லுறன் சும்மா கதைக்கிறதை விட நீங்கள் மாறுங்கோ "எல்லோரும் மாற்றங்களை விரும்புகிறார்கள் தாங்கள் மாறுவதை அல்ல" எண்டு ஆரோ சொன்னது இந்த நேரத்தில ஞாபகம் வருகுது...

கொழும்பில காலமை குண்டு வெடிச்சா பின்னேரம் மறந்து போகுதுகள் சனம் ஏனெண்டா அங்க இருக்கிறதுகளுக்கு உதுக்கெல்லாம் நேரம் கிடையாது அவரவற்றை வேலையும் வாழ்வும் முக்கியம் வன்னிக்கை நடக்கிறதைப்பற்றி வாசிக்க முடிந்தாலும் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை பேராதனையில் படிக்கிற பெடியளுக்கு வீட்டில என்ன, படிச்சமா, fun எடுத்தமா, நாலு பேரோட பழகினமா, வேலை தேடி வெளிநாட்டுக்கு போனமா எண்டு இருக்குதுகள் இளசுகள்.

தெளிவான நாகரிகமும் திறைமையும் மிகுந்தவர்கள் இலங்கையர்கள என்பது மற்றய நாட்டுக்காரர்களின் அபிப்பிராயம் ஆனால் நாட்டுக்குள்ள நடக்கிறதை பார்த்தால் அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் போலயெல்லோ கிடக்கு... சும்மா வீண் விதண்டாவாதங்களில காலத்தை விடாம பரஸ்பரம் ஒவ்வொரு தனி மனிதனும் மாறுதலும் புரிந்து கொள்ளுதலும் அவசியம் எண்டுதான் எனக்குப் படுகிறது...

ஏன் கடந்த காலங்களை சொல்லிச் சொல்லி நிகழ் காலத்தை இழக்க வேண்டும் 2003 இல பிறந்ததுக்கு என்ன தெரியும் 70 இல இருந்து பிறந்ததுகளில பாதி கெட்டு சீரழிஞ்சு போட்டுதுகள், போதாதெண்டு எதுக்கிந்த கொலை வெறி; வேண்டாம் புன்னகையும் வாழ்த்துக்களும் எந்த விதமான செலவும் இல்லாமல் மற்றவாகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரும் செல்வங்கள் அவற்றை மனதார வழங்குவோம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு...

0 comments: