விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!

உண்மைதான் ஊருக்கு தெரிந்தவன் என்ன செய்தாலும் பெரிய கதைகள்தான் போல.நடிகர் விஜய் யாரையோ பார்த்து சத்தம் போட்டாராம் அது பற்றிக் கொண்டுவிட்டது இவர்களின் இருக்கைகள் எங்கும். விஜய் கோபப்பட்டதையே அக்கறையோடு பேசுகிற தமிழர்களின் மெல்லிய மனதை யாரும் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுதும் கத்திக் கொண்டிருக்கிற தமிழர்களை கவனிக்கவும் அவர்கள் பிரச்சனையை அலசவும்தான் ஆளில்லாமல் போய்விட்டார்கள்.எப்படி இவ்வளவு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது உலக நாடுகளுக்கு.

இதில் பதிவுகள் சூடாகியது விஜய் சூடாகியதை விட பெரிய பரபரப்பு (இந்த சூடான இடுகைகள் பற்றிய விசயம் பலரும் ஆராய்ந்தது அது பற்றி வேறொரு முறை பார்க்கலாம்) முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல தமிழர்கள் எப்பொழுதும் அடுத்த பரபரப்புக்கு அலைகிற மனோநிலையில் இருப்பவர்கள்தான். வாயில் மெல்லுவதற்க்கு அடுத்த வீட்டு விசயம் என்ன இருக்கும் என்று அலைபவர்கள்தானே. கொஞ்ச நாள் சிவாஜி, கொஞ்ச நாள் கமல்-கொளதமி, கொஞ்சநாள் முத்துக்குமார் கொஞ்சநாள் ஒஸ்காரும் ரஹ்மானும் என்று மாறிக்கொண்டே இருக்கிறது அவர்களது பரபரப்புகள்.இந்த பரபரப்புகள் பற்றி சமீபத்தில் தமிழ் மண நட்சத்திரமாய் இருந்த அண்ணாச்சி சாத்தான் குளத்தான் நச்சென்று ஒரு குறிப்பு சொல்லியிருப்பார். மேற்குலகம் சரியாக கணித்ததும் பயன் படுத்துவதும் இந்த பலவீனத்தைதான், பொங்கிக் கொண்டிருந்தவர்களை ரஹ்மானை கௌரவித்து திசைதிருப்ப முயன்றார்கள்.


மின்னஞ்சலிலிருந்து பதிவுகள் பத்திரிகைகள் வரைக்கும் விழுந்தடித்து எழுதியிருந்தார்கள். என்ன பிரச்சனைனயோ அவருக்கு ஏதோ கோபப்பட்டு கத்தியிருக்கிறார் இதுக்கு இவர்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள் இதைப்பார்த்து நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.

_____________________________________________________

\\
இந்தப் பதிவுக்கும் விஜய் என்று நான் தலைப்பு வைத்திருக்கிறேன் ஆனால் இது சூடாகப்போவதில்லை என்பது நிச்சயம்.

\\
விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

\\
அதே போல பதிவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

கற்பிக்கப்பட்ட பாடம் - இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை முன்வைத்து!!!

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இலங்கையின் படித்தவர்களும், பல்கலைக்கழங்களும், இளைய சமுதாயமும் எந்த பொறுப்புணர்வும் இல்லாமலும் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான் மற்றவர்களுக்கு தான் இப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடவா சிந்திக்கிற ஆற்றல் இல்லாமல் போயிற்று?!

நாட்டில் நடைபெறுவது என்ன நாம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலா இருக்கிறார்கள்?!

எப்பொழுது நிகழப்போகிறது இலங்கையில் ஒரு சிந்தனை மாற்றம்.?!


அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அந்த பொறுப்பிருப்பதாக எனக்கு படுகிறது அவர்களும் இலங்கையின் பெருமைக்குரிய பிரஜைகள்தானே?!

இனி...

லோஷனுக்கு ஒரு பின்னூட்டம் எழுதப்போய் அது கொஞ்சம் பெரிதாகிப்போனதில் பதிவாக்கியிருக்கிறேன்.

இது கட்டாயம் இலங்கைக்கு ஒரு பாடமாகவே இருக்கும். இலங்கையில் இத்தனை பிரச்சனைகளும் கெடுபிடிகளும் இருக்கையில் உயிர்கள் கிரிக்கெட் ஸ்கோர் போல எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கையில் விளையாடுவதற்கு சம்மதித்த இலங்கை அணிக்கும், எந்த வித மனிதநேயமும் இல்லாமல் புலிகள் மீதிருக்கிற நம்பிக்கையில் இலங்கைக்கு வந்து விளையாடிப்போன இந்திய அணிக்கும் (உண்மையில் பாகிஸ்தானுக்கு போகாமைக்கு மும்பை தாக்குதலுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல உள்ளுர இருந்த பயமும்தான் காரணம்) பாகிஸ்தானின் இந்தத்தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் அல்லது அவர்களுடைய இறையாண்மையிலும் மனச்சாட்சியிலும் சலனத்தை உண்டுபண்யிருக்கும்.


அதே நேரம் இலங்கை அணி இந்தியாவில் போய் விளையாடி இருக்கலாம். அதை செய்யாமல் மெத்தனத்தில் நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் சாப்பிடுகிறோம், குளிக்கிறோம் என்பது போல இதனையும் செய்து அத்தனை போட்டிகளிலும் மண்ணைக்கவ்விக் கொண்ட போதே புரிந்து கொள்ள வேண்டாமா இது காலத்தின் கட்டாயம் என்பதை!

இந்தியா புலிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இலங்கை பாகிஸ்தான் மீது வைத்தது இலங்கையின் முட்டான்தனமே ஒழிய பாகிஸ்தானுடைய குற்றமல்ல, அவர்கள் தாக்குவதென்று முடிவெடுத்துவிட்டால் இலங்கை கிரிக்கெட் அணி என்ன, எந்த நாட்டு ஜனாதிபதி வந்தால் என்ன, மறு கருத்தே கிடையாது அடிதான்!! பின்விளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அதனை எப்படி கையாளுவதென்பது அதற்கான பக்க வலு அவர்களிடம் இருக்கவே இருக்கிறது ஆனால் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் யாரிருக்கிறார்கள் உலகம் கண்டு கொள்ள விரும்பாத அடிமைகள்தானே அவர்கள்...

இதனை நான் கூறுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது இலங்கையின் உலகம் கவனிக்ககூடிய விசயங்களுள் இலங்கை கிரிக்கட் அணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகவே அவர்கள் ஆகக்குறைந்த மனித நேயத்தோடு அவர்களுடைய தொழிலை செய்திருக்கலாம் என்பதே! இலங்கையில் இவ்வளவு உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிறது நாளாந்தம் அரசியல் சட்ட யுத்த கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது எனவே நாங்கள் இந்த போட்டிகளை ரத்து செய்யலாம் என்று ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது உலக ஊடகங்களில் ஒரு சிறு சலனத்தையேனும் ஏற்படுத்தி இருக்கும் அல்லது இந்த காரணங்களை கூறி இந்தியாவில் விளையாடலாம் என்றாவது முடிவெடுத்திருக்கலாம். ஏனெனில் ஒருவன் தன்னை கொழுத்திக்கொண்டு சாவதை விட உலகம் பெரிய நட்சத்திரங்கள் சொல்வதையும் பணம் நிரம்பிய சமூகபெரிய மனித அந்தஸ்து உள்ளவர்கள் சொல்வதையும்தானே கவனிக்கிறது அதற்காகக்தான் சொன்னேன்!

செத்துப்போன முத்துக்குமாரிலிருந்து பலரும் சொன்ன "என் தமிழ் இனம் அழிகிறது அதனை காப்பாற்றுங்கள்" என்பதை விட "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்பது தானே பேசப்படுகிறது, உலகம் கொண்டாடுகிறது ஒவ்வொரு கேனையனும் ஊடகங்களும் சொல்லி சிலாகிக்கின்றன. இன்னொன்று ரஹ்மான் அதே மேடையில் இந்தியும் பேசியிருந்தார்.

ஆக இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தாக்குதல் தீவிர வாதம் என்பது என்ன விடுதலைப்போராட்டம் என்பது என்ன, என்பது தெரிய ஒரு வாய்ப்பாகவும் அது இந்தியா உட்பட உலகத்துக்கும் தெரிய ஒரு வாய்பாகவும் அமைந்த பாடம் என்பது என் கருத்து .

மற்றப்படடி தாக்குதலில் உயிர்நீத்த காவல் துறையினருக்கு அஞ்சலிகளையும், காயப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அக்கறையான விசாரிப்புகளையும், இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தானுக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.