ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கவின் பதில்களும் என்னுடைய புலம்பல்களும்...

ஒரு இணையத்தளத்தினை கடந்து செல்கையில் என் கண்களுக்கு தட்டுப்பட்ட பிரதமரின் பதில்களும் என் சிற்றறிவுக்கு வந்த சிந்தனைகளும் (பதிவு போடுவதற்கு ஒரு சாட்டு) ஏதாவது எழுதவேணும்தானே எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் கிடையாது சின்ன வயதிலிருந்தே அரசியல் என்றால் அது ஒரு திருகுதாளம் பண்ணுகிற தொழில் என்றுதான் கருத்து இருந்து கொண்டிருக்கிறது எனக்கு:)

போடுவதே உப்புச்சப்பில்லாத பதிவு அதில என்னுடைய சுயபுராணம் வேறை தேவையோ அதனால கனக்க அலட்டாம பதிய வந்த விசயத்தை பதிஞ்சு போட்டு போறன் படிக்க முடிஞ்சா படியுங்கோ...

சிறிலங்கா அரசின் ஊடகமான ஏரிக்கரை பத்திரிகையின் வாரப் பதிப்புக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

"தமிழீழத்தை ஆதரித்து தனது பிரச்சினைகளை இந்தியா அதிகரித்துக்கொள்ளாது:
சிறிலங்கா நம்பிக்கை தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய் தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்
"

என்ன இந்தியா இதைக்கேட்டியோ நீ நல்ல கதைதான் பாத்தியோ! அதுவும் சரிதான் உனக்கே எத்தனை பிரச்சனை இருக்கு நீயே தமிழ் மக்களெண்டால் அது ராஜீவைச்சுட்டாக்கள் எண்டுதானே நினைச்சுக்கொண்டிருக்கிறாய் உனக்கின்னும் அந்த விசயமே தெளிவாகையில்லை.

முன்னர் ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த வரதராஜப்பெருமாள் போன்று பிள்ளையானும் இந்தியாவினால்தான் இயக்கப்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு;

"மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வர் என்று அவர் பதிலளித்திருக்கிறார்"

பிள்ளையான் ஆரோட இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவர் என்ன செய்யப்போறார் எணடுறதுதானே இப்ப சனத்தின்ரை கேள்வியெல்லாம்...
(முதல் அவர் பதவியில இருக்கோணும் இருந்தாலும் உயிரோட இருக்கோணுமே)

"கருணா நாடு திரும்பிய பின்னர் பிள்ளையான் தலைமையிலான குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு;

"அது பிள்ளையான் குழுவைப் பொறுத்தது। அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்."


அப்ப கருணாம்மானுக்கு ஒரு தனி இடம் அரசாங்கத்தில இருக்கெண்டுறது வெட்ட வெளிச்சம்...

வட போர்முனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்;

"முதல் முறையாக விடுதலைப் புலிகள் வன்னியில் நான்கு போர் முனைகளால் முன்னேறும் அரச படையினரை எதிர்கொண்டுள்ளனர்.
90 ஆயிரம் படையினரின் இந்த முற்றுகையின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சிறிது சிறிதாக அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. சண்டையிடுவதற்கு ஒருவருமே எஞ்சியிராத நிலை வெகு விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்"


என்ன நடக்குது வடக்கில இனி என்ன நடக்கப்போகுது? சண்டைபிடிக்கிறது ஆளில்லாமல் போகலாம் சரி அது வேறை விசயம் வடக்கில இருக்கிறதுக்கு ஆக்களிருப்பினம் தானே...

அமைதிப் பேச்சுக்கள் குறித்து கேட்டபோது;
"விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற கதைக்கே இனி இடமில்லை. இது விடயத்தில் எந்த புறச்சக்திகளின் கட்டளைக்கும் அரசு அடிபணியாது"


அப்ப ஒரு முடிவுக்கு வந்துதான் நிப்பாட்டுவினைபோல...

"வெளிநாடுகள் எமக்கு நண்பர்களாக இருக்கும் வரை அவர்களின் பங்கு, பணி பாராட்டப்படும் எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை அவர்களுக்கு கிடையாது அந்த வகையில் விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தை செய்து கொள்ளவும் அரசு தயாரில்லை"

நம்மட ஆக்கள் எல்லாம பெரிய சண்டியர்களாகிவிட்டினம் ஒசாமா ரேஞசுக்கு அடுத்த நாடுகளோட சவால் விடுகிற அளவுக்கு:)

"அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுக்களில் தமக்குள்ள நேர்மையை காண்பித்தால் அது தொடர்பாக அரசு பரசீலிக்கும். அமைதிப் பேச்சுக்கள் வெளிநாடுகளில் ஒன்றும் நடைபெறாது. உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டில்தான் பேசப்படும் என்று கூறியுள்ளார்."

அப்ப இவ்வளவு நாளும் என்னத்தைக்காட்டி பேசினவையள் என்ன நீங்கள் சொல்லுறியள் எனக்கு விளங்கையில்லை, என்னடா கேக்குறவன் கேணையன் எண்டால் எனக்கு வாயில வருகுது நல்லா...

வெளிநாடுகளில் நடக்க மாட்டுதெண்டுறது நல்ல விசயம்தான் தேவையில்லாத மூக்கு நுழைப்புகளையும் அரசியல் தலையீடுகளையும் குறைச்சுக்கொள்ளலாம் அனால் இரண்டு தரப்பும் பேச வாறதுக்கு முன்னம் சில முடிவுகளெடுத்துக்கொண்டு வாறது நல்லது எண்டுறது என்னுடைய எண்ணம் பேச்சுவார்த்தை மேசை கொத்து ரொட்டி தட்டாகக்கூடாது பாருங்கோ...அதோட ஆராருக்கு என்ன வேசம் அவையின்ர பாத்திரத்துக்கு என்ன கதை வசனம் ஆருக்கு பதிலா ஆர் பின்னணிக்குரல் குடுக்குறது எண்டெல்லாம சரியாக்கவனிக்க வேணும் முக்கிமான விசயம் எத்தனை எபிசோட் பேசுறது முடிவுரை என்ன எண்டுறதையும் முதலே தீர்மானிச்சுங்கொள்ளுங்கோ ஏனெண்டால் பேசப்போறது நீங்கள் அதைக்கேக்கப்போறதும் நீங்கள் தானே சனம் உப்பிடி எத்தினையைப்பாத்துட்டுது...

உவர் இப்பிடிச்சொல்லுறார் அவர் வெளிநாடுகளிட்டை என்னென்னவோ சொல்லுறார் உங்கடை கூத்துகளைப்பாத்தா உங்களுக்கே சிரிப்பு வரயில்லையே எதிர்காலத்தில உங்கடை பேரப்பிள்ளைகள் படிக்கேக்க இலங்கையின் அரசியல் என்றால் எல்லாம விரும்பிப்படிக்குங்கள் அவ்வளவு சிரிப்பு வருகிற பாடமாத்தான் அது இருக்கும்அதனாலதான் நான் இளைய சமுதாயத்திட்டை அடிக்கடி கேக்குறது இலங்கையின்ரை வரலாற்றை மாற்றி எழுதுவம் வாங்கோவெண்டு.

அது சரி இந்த தரப்பு ஆடாத கூத்தெல்லாம் ஆடிக்கொண்டிருக்கு ஆனா மற்றாக்கள் ஒண்டும் கதைக்கிற மாதிரி தெரியயில்லையே ஓ... ஒரு வேளை அவை கதைக்கமாட்டினம் ஆனா அங்கங்க வெடிவச்சு நாங்கள் இருக்கிறம் எண்டு காட்டிக்கொள்ளுவனை எண்டு நினைக்கிறன் என்ன கொடுமையடா இது எங்கடை சனத்துக்கு...

நீங்கள் எவ்வளவு புடுங்கினாலும் கொழும்புக்குள்ளை குண்டு வெடிக்கிறத தடுக்க முடியயில்லைதானே உங்களுக்கு எண்டுறமாதிரி இருக்கு நாட்டில நடக்கிற விசயங்கள் , அதேமாதிரி தின்ன இல்லாட்டிலும் வருத்தத்துக்கு மருந்தில்லாட்டிலும் நாங்கள் களத்தில பலமாத்தன் இருக்கிறம் எண்டு மற்றாக்களும் ஒரு பிடியாத்தான் இருக்கினம்...
எனக்கு சிரிப்புத்தான் வருகுது உவையளின்ர கூத்துகளைப்பாக்க ஒரு வேளை எனக்கு அறிவு போதாதோ உதுகளையெல்லாம் புரிஞ்சுகொள்ளுகிற அளவுக்கு; இருக்கலாம் அரசியலும் வரலாறும் எனக்கு தெரியாதுதான் ஆனா அடுத்த மனுசனை நல்லாத்தெரியும் பாருங்கோ ஏனெண்டா என்னட்டை இருக்கிற ஒரே சொத்து அன்பு எனக்கிருக்கிற ஒரே திறமை புரிந்துணர்வு...

இதுகளைப்பற்றி எழுதப்போனால் நான் எழுதுறது இப்ப முடியாது அதால இந்தப்பதிவை இதோட நிப்பாட்டுறன் ஏதாவது டவுட் இருந்தா ஆராவது அரசியல், வரலாறு தெரிஞ்சாக்களுட்டை கேளுங்கோ நான் வாறன் போட்டு ஒரு விசயத்தை மறந்து போட்டன் உண்மையா இது எனக்கு அந்த கட்டுரையை வாசிக்கேக்க மனதிலை வந்த விசயங்கள் மட்டும்தான் வேற எந்த உள்குத்தும் கிடையாது, ஒரு பதிவு போடவேணும் எண்டு இதையெல்லாம் எழுத வேண்டியிருக்கு...

உனக்கு தெரியுமோ மச்சான்...1

*
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...

*
நாங்கள் பாடாத
பண்பாடோ
நாங்கள் பேணாத
கலாச்சாரமோ
நாங்கள் காட்டாத
மனித நேயமோ
நாங்கள் கவனிக்காத
மனித உரிமைகளோ
நாங்கள் நாடாத
சமாதானமோ
நாங்கள் பேசாத
சுபிட்சமோ
நாங்கள் செய்யாத
யுத்த நிறுத்தமோ
எவ்வளவு பார்த்திருப்போம்
முப்பது வருடங்களாக
அன்பையும் சந்தோசத்தையும் தவிர...

ஒரு சின்ன கவிதையும் பெரிய பொருளும்...

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இந்தக் கவிதையை தந்து போயிருந்தது யாரோ ஒரு தென்னாபிரிக்கா சிறுமி ஒருத்தி எழுதியதாகவும் அது 2006 ம் ஆண்டின் சிறந்த கவிதை கவிதையாக UN அமைப்பின் தேர்வாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் சொல்லியிருந்தது...

வாசித்துப்பாருங்கள்;

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black And
when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green And
when you die, you gray And
you calling me colored??

எவ்வளவுதான் உலகம் ஒரு முகப்படுத்தப்பட்டாலும், இன்னமும் மனிதன் மறக்கவும் தவிர்க்கவும் வேண்டிய பல விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சின்ன குழந்தையின் கவிதை சொல்லிப்போகிற விடயம் மிகப்பெரியதாகவிருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறது...

இந்தப்பிரச்சனை சக மனிதனை தங்களில் ஒருவனாக பாவனை செய்வதற்கு பலருக்கு முடிவதில்லை... நிறம், மதம், மொழி, தொழில், அந்தஸ்து, என்ற பல காரணிகளால் ஒருவரை ஒருவர் ; மற்றவரிலிருந்து பிரித்துக்கொள்கிறோம் தேவையற்றதாகிய தன்முனைப்புகளில் அடுத்தவருக்கும் நமக்கும் சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

இலங்கையில் இருப்பதும் இதுதான் ஒரு நாள் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் மறந்து இலங்கையர்களாக வாழ்ந்து பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று அதன் பிறகு பாருங்கள் ஒரு நாள் முதல்வன் போல இந்த ஒரு நாளில் இலங்கை எவ்வளவு மாறிப்போகிறதென்று...



என்ன ஒரு நாளுக்கான அனுமதியை யார் தருவார் என்று யோசிக்கிறீர்களா... இதுதான் இந்த தயக்கம்தான் இலங்கை இப்படி இருப்பதற்கு காரணம் மனதில் ஆசையிருந்தாலும், விருப்பமும், சந்தோசமும் இருந்தாலும் மற்றயவர்களோடு பழகுவதில் காட்டுகிற தயக்கமும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத அந்த சூழல்தான் அடிப்படையே॥ மனதில் இருவருக்குமே ஆசையும் காதலும் இருந்தாலும் நாட்டின் நிலமையால் உள்ளுக்குள் அழுதுபிரிந்த காதல் பலதை நான் பார்த்திருக்கிறேன்...


தயாராகுங்கள்... உண்மையாக வாழ்வதற்கு மாற்றிக்காட்டுவோம் இலங்கையை புதியதாக.பழையன கழிவதும், புதியன புகுவதும்... உலக இயல்பு நாம் மட்டும் ஏன் இன்னமும் முப்பது வருடம் பழைய பகையை; சில சுயநல வாதிகளிற்காகவும், தவிர்க்க முடியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...


மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.