மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1

கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில இருந்து குறைஞ்சது ஒரு ஐந்து பதிவெண்டாலும் போடலாம் குடும்பம் காதல் வேலை சம்பளம் என்பதோடு கலாச்சாரம் வாழ்வியல் மனிதர்கள் சூழ்நிலை என பல விசயங்களை எழுதி என்ரை மண்டைய காய வைச்சுப்போட்டான் ( அதுல அவனுக்கென்ன சந்தோசமோ பாவம் அனுபவிச்சுட்டுப் போகட்டும்) இதெல்லாம் போதாதெண்டு Phone எடுத்து “பதிலைப் போடடா கடைசி” எண்டு தொடங்கி குடுத்தான் ஒரு பிரசங்கம் பாருங்கோ அது தனி பதிவிலை போடலாம் கெட்ட வார்த்தைகளை சந்தோசமாக பயன்படுத்துவது எப்படி என்றுஆனாலும் அதுகளை வாசிச்ச பிறகுதான் தெரியுது மத்திய கிழக்குல என்ன நடக்குதெண்டு இனி கொஞ்சம் அவன் கடிதங்களில் இருந்து


மச்சான் எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இருந்துதானே ஆகவேண்டும் அதை விடு ஆனால் நீ அடிக்கடி கடிதம் போடு நான் இங்கே இருப்பதற்கு அவைதான் வேண்டும் நான் உங்களை எல்லாம் இழந்துவிட்டிருக்கிறேன் என்கிற உணர்வே எனக்கு வரக்கூடாது அதற்காகவேனும் முடிந்தவரை ஊரில் நடக்கும் விசயங்களை எனக்கு எழுது என…இங்கே நான் இருக்கிற இடத்தில் இ 21 இலங்கை ஆட்கள்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் கிழக்கிலங்கை முஸ்லீம்கள் என்னுடைய அறையில் நீர்கொழும்பு மனோஜ் மட்டக்களப்பு றொட்ணி பொத்துவில் ஷெயனுதீன், ஷரிவுதீன் என மொத்தம் 5 பேர் இருக்கிறோம் ஆனால் நான் இருப்பது ஒரு Camp Accommodation, இதிலை பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் துருக்கி என்று கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கிறம். சாப்பாட்டுக்கு நான் கவலைப்பபடுபவன் கிடையாது அது எனக்கு இருந்தால் போதும் ஆனாலும் ஒரு கூட்டத்துக்கு சமைப்பது போல தான் சாப்பாடு இருக்கும், சவுதிக்கு வந்ததில் முதல் செத்தது நாக்கு மச்சான். விமானம் ஏறும் பொழுதே நான் செத்துப்போனேன் என்பது வேறுவிடயம் அவள் இல்லாத இடத்தில் எனக்கெப்படி உயிர் இருக்கும் சரி அது பற்றி பிறகு எழுதுகிறேன் ஆனால் அது சம்பந்தமாக இப்ப கதைக்கிறதே ஒரு சுமை போலவும் சுகம் போலவும் இருக்கு சரி சரி இப்ப இதை நிப்பாட்டி வைப்பம்.

எனக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஒரு வாழ்வியல் முறைக்குள் வந்து மாட்டிக்கொண்டேன் என்பது சுருக்கமாக சொல்லும் என்னுடைய நிலமை ஆனால் எனக்கு இங்கு பல விடயங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது நிறைய விசயங்கள் புரியாமலும் இருக்கிறது...

குளிக்கிறதுக்கு பொதுவான குளியலறைகள் தான் நீளமாக வரிசையாக கட்டியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் குளியலறை ஒரு பக்கத்தில் கழிவறை என்று இருக்கும் அனேகமாய் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வேலை என்கிற படியால குறிப்பிட்ட நேரங்களில் அதுக்குள்ள போகவே முடியாது நான் முடிந்தவரை முதல் அல்லது தனியான நேரத்தில் போய்க்கொள்ளுவேன். அதெல்லாம் பறவாயில்லை ஆனால் இங்கே இருக்கிற மனிதர்களை புரிந்து கொள்வதுதான் பெரிய கஷ்டம் மச்சான் ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு மாதிரி பார்க்கலாம் போகப்போக ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளலாம் .......ஆனால் இவர்கள் எப்படியான நம்பிக்கையில் சவுதிக்கு வந்தார்கள் என்று பலரைப்பார்த்து வியந்திருக்கிறேன் ஆனால் அவர்களையும் குறை சொல்ல முடியாது அரவரவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ இங்கேயும், வீட்டிலும், இவர்களுக்குள்ளும் இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கும் வலிய யாரும் போவதுமில்லை அதே நேரம் மனதளவில் நெருங்குவதுமில்லை விலகுவதுமில்லை அவசரத்துக்கு உதவி செய்யாமலும் இல்லை.

ஒரு விதமான... இயல்பும் இல்லாத, இருத்தலும் இல்லாத நாட்கள் மட்டுமே நகருவதாகிய வாழ்வியல்தான் இங்கே இருக்கிறது... மொத்தத்தில் எனக்கும் என் வாழ்க்கை முறைக்கும் சற்றும் பொருந்தாத இடத்தில் இப்பொழுது இருக்கிறேன். நான் கொண்டு வந்த அக்கினிச் சிறகுகளை இது வரை எத்தனை முறை வாசித்தேன் என்று என்கே தெரியவில்லை மிக முக்கியமாய் புத்தகங்கள் என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்கிறது... இன்னும் மூன்று வருடங்கள் எனக்கு வீணாகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.....

நான் என்ன மாதிரியானவன் என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இது எனக்கு கிடைத்திருக்கிற தண்டனையும் நரகமும். எனக்கான உலகத்திலிருந்து நான் மிகத்தெலைவிலான ஒரு தண்டனைத்தீவில் தனித்து விடப்பட்டதாகிய உணர்வுதான் எனக்கு இப்பொழுது இருக்கிறது. இரவுகள் மிக நீளமாய் தூக்கத்திற்கு எதிரான ஊசி மருந்துகளை நிமிடத்திற்கொருமுறை முறையற்று குத்திக்கொள்வதைப்போல நித்திரை என்பது என்னோடு பகைத்திருக்கிறது. ஆனாலும் நான் இங்கே இருந்துதானே ஆக வேண்டும் நம்முடைய நிலமை அப்படித்தானே இருக்கிறது....நல்ல வேளை இலங்கை எனக்கு எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழ்வதற்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறது... நானெல்லாம் நெளிநாடு வருவேன் அதுவும் சவுதிக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்ன செய்ய இலங்கையின் கேவலமான அரசியலும் தேவையில்லாததுமான யுத்தமும் ஊரில் ஒழுங்காக வேலை செய்ய முடியாத வகைக்கு ஆக்கி விட்டிருக்கிறது.

நாம் நினைத்தோமா இப்படி திடீரென்று எல்லோரும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுவோம் என இல்லையே... மச்சான் எனக்கு இப்ப இருக்கிற கோபம் எல்லாம் இலங்கையில் தேவையில்லாத ஒரு யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிற எல்லோரிலையும்தான் இது விடுதலைக்கான போராட்டம் போல இல்லை மச்சான் ஒரு வெறும் அரசியலாகத்தான் எனக்கு படுகிறது இப்ப இலங்கையில் இருக்கிற தலைமுறைக்கு இந்த அரசியலும் தெரியாது இன வேறுபாடும் தெரியாது ஏன் நானே நாட்டில வேலை செய்தது சிங்களப் பெடியளோடதானே. அரசியல்வாதிகள் தான் பழைய கதைகளையும் இல்லாததையும் சொல்லிச்சொல்லி நாடடை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகள் வேடிக்கை பார்ப்பதோடு தங்களுக்கான வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றன... இதை எழுதினால் கடிதம் இப்ப முடியாது.... அடுத்த கடிதத்தில் மிகுதி அனுபவங்களை எழுதுகிறேன் தற்காலிகமாக இப்ப முடிக்கிறேன் மொத்த ஊரையும் சுகம் கேட்டதாக சொல்...

சந்தோசம் வாழவின் பலம்...

அன்புடன்
உங்கள்...

வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

வ-வா-ச போட்டி என்று ஒன்று நடப்பதாக சொல்லியிருந்தார்கள் பல இடங்களில் அதற்கான ஆக்கங்களையும் பார்க்க முடிந்தது...சரி நானும் ஏதாவது எழுதலாம் என்று யோசிக்கையில் என்னுடைய பாழாப்போன பாதிக்கப்பட்ட மனதுக்கு இலங்கையில் பிறந்தவன் என்கிற ஒரேகாரணத்தால் இந்த சங்கத்தின் இயல்புக்கு மாறாகத்தான் எழுதவும் முடிகிறது வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை॥ நிலமை அப்படி நான் இழந்தவைகள் ஒருவேளை என்னை தொடர்ந்துகொண்டே இருப்பதாலோ தெரியவில்லை நான் எழுதுவதெல்லாம் இப்படியாகவே இருக்கிறது... ஆனால் இயல்பில் நான் சந்தோசம் நிறைந்தவன் சந்தோசம் வாழ்வின் பலம் என்பது நான் நாளாந்தம் பயன்படுத்துகிற வாக்கியங்களில் ஒன்று ...

சரி இனி விசயத்துக்கு வருவோம்...

1970 களில் இருந்து தமிழர்களில் இருந்த தலைமுறையில் இளைய தலை முறையினரில் பெரும்பாலானாவர்களின் வாழ்க்கை கெட்டழிந்து போய்விட்டது என்றால் யாரும் மறுக்க முடியாது...அந்த நாட்களில் 18 20 வயதிலிருந்து நடுத்தர வயது வரை இருந்த எல்லோருமே தங்கள் வாழ்வின் பாதை மாறிப்போன அல்லது॥ பாதிக்கப்பட்ட அல்லது தடைப்பட்ட அனுபவங்களை கட்டாயம் வைத்திருப்பார்கள்... அவற்றை சொல்வதற்கு அவர்களில் பெரும்பாலானாவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் உயிரோடு இல்லை என்பது இவர்கள் ஒன்றும் இயலல்பாக இறக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது...

சரி அந்த நாட்களில் இருந்த சூழ்நிலையும் வழி நடத்தல்களும் அப்படித்தான் இருந்தத்...அதனால் பாதிக்கப்பட்டது ஆனால் அது இன்னமும் தொடர்வதில் என்ன லாபம் ஆரம்பத்தில் தமிழர்கள்தான் என்றிருந்து நிலமை மாறி ஒட்டு மொத்த இலங்கையுமே அரசியல் நரிகளால் சுபிட்சத்தை தொலைத்திருக்கிறது...

பழைய கதைகளைப்பேசிப்பேசியே அரசியலில் சுய லாபம் தேடிக்கொள்பவர்களும் இதற்கு ஏதாவது செய்ய முயன்று அநியாயமாக இறந்து போனவர்களும் தங்கள் இயல்பான நிலையுடனும் உணர்வுகளுடனும் வாழ முடியாமல் போன இலங்கையின் சபிக்கப்பட்ட மக்களுமாக இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது இந்து துயரம்।தங்கள் இதயங்களில் எலலோரோடும் கலந்து வாழவும் சந்தோசித்திருக்கவும் ஆசையிருக்கிற இளம் சமுதாயமும் கேவலமான அரசியலாலும் யுத்தத்தினாலும் ஒருவரோடொருவர் பரஸ்பரம் மனம்விட்டு பழக முடயாத சூழலில் இருக்கிற சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

அப்பபொழுதிருந்த நிலமையில் அப்படியாகிவிட்டது இப்பொழுதும் ஏன் அதையே பேசி எங்களையும் வீணடிக்கிறீர்கள் என்கிற மனநிலைமைதான் இன்றய இளம் சந்ததியினருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம் இளம் சந்ததி மட்டுமல்ல எல்லோருமே ஏறக்குறைய இந்த மனோநிலையில்தான் இருக்கிறார்கள்... நாடு எப்பொழுது நல்ல நிலைக்கு வருவது நாம் எப்பொழுது நன்றாக வாழ்வது என்கிற களைப்பும் சலிப்புமானதொரு இயல்பற்ற வாழ்க்கைதான இருக்கிறது இலங்கை மக்களுக்கு...

சரி இது இப்படி என்றால் 2000ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு என்ன தெரியும் 1970களிலும் 1980களிலும் நடந்ததைப்பற்றி அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் முறையான வாழ்க்கை இல்லாமல் போகும்படிக்கு ஒரு வேளை இலங்கையில் பிறந்ததுதான் அவர்கள் செய்த பாவமோ என்னவோ... இரண்டு தலை முநைகள் வீணாகி விட்டது இனியும் வேண்டாம் இந்த சோகம் நாங்கள் வாழ்வதற்கு தயாராயிருக்கிறோம் எங்களை வாழவிடுங்கள்... தயவு செய்து...அழகான தீவில் அமைதியான சூழலில் அற்புதமான வாழ்க்கை எங்களுக்கு காத்திருக்கிறது அதனை வாழவிடுங்கள்; முடிந்தவரை முன்னேறிய இலங்கையை வருகிற சந்ததிக்கு தருகிறோம்....


வருத்தப்படாத வாலிபர்களின் சங்கத்தின் போட்டிக்கு இதனை எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஆனால் இந்த விடயம் நிச்சயமாக வருத்தப்படாதவர்கள் முலமாகத்தான் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பது என் கருத்து ச்தோசமாயிருக்கிறவர்களால் மட்டுமே அடுத்தவர்களையும் சந்தோசமாய் வைத்திருக்க முடியும்। என்ன நான் சொல்வது...
மற்றப்படி எந்த உள்நோக்கமும் கிடையாது...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

ஓரு ஆசிரியர் கட்டுரையும் என் புலம்பலும்...

முதலில் ஆசிரியர் கட்டுரை...
Posted on: 2008-04-01

பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை

உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படும் அவலங்களையும் கேக், பாண் போன்றவற்றின் பெறுமதிகளையும் அறியாதவனாக.அதுபோல, இலங்கை அரசின் மோசமான அரசாட்சி முறைமையினாலும், திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல், மோசடிகளினாலும் நாட்டின் பொருண்மிய நிலைமை நலிவுற்று, அப்பாவி மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் நேர்ந்திருக்கிறது. இச்சமயத்தில் "கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதை விடுத்து அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள்!' என்று விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்துக் கோரிக்கை விடுக்கிறார் இலங்கையின் அமைச்சர் ஒருவர்.அதுவும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இப்படிக் கணக்கு வழக்குப் புள்ளி விவரங்களுடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்று லூயி மன்னன் கூறியமை போன்று ""பாண், றொட்டி போன்றவை விலை கூடவென்றால் அரிசியில் தயாரான சோற்றைச் சாப்பிடுவது மலிவானது!'' என்று குறிப்பிட்டுக் கணக்கு வேறு காட்டி யிருக்கின்றார் விட்டிருக்கின்றார் அவர்.உலக சந்தையில் கோதுமை மாவின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதால் தாம் முன்னர் ஒரு தடவை ஆரூடம் கூறியமை போன்று ஓர் இறாத்தல் பாணின் விலை விரைவில் நூறு ரூபாவானாலும் ஆச்சரியப்படுவதற்கே இடமில்லை என்றும் அப்படியாவதை ஒருவராலுமே தடுத்துவிட முடியாது என்றும் வெகு "சிம்பிள்' ஆகக் கூறியிருக்கின்றார் அவர்.அவரது பேச்சையும், கணக்குக் காட்டும் திறனையும் நோக்கும்போது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டியபடி, பட்டினி அவலத்தைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுத் திணறிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பாமரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.அரிசியின் விலையும் உயரப் பறந்துகொண்டிருக்கின்றது. தேங்காயின் விலையும் தென்னை மர உச்சியையும் தாண்டி உயர்ந்துவிட்டது. சோறு சமைப்பதற்கான எரிபொருள், எரிவாயு அல்லது விறகின் விலைகளும் எகிறிவிட்டன.இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாண் வாங்கிச் சாப்பிடுவதை விட, அரிசியைச் சோறாக்கி, தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடுவது மலிவானது என்று கூறி மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி, வசவை வாங்கிக்கட்டிக் கொள்கிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.இலங்கை மேலும் மேலும் வறுமைக்குள் நீண்ட கால அடிப்படையிலும், குறுகிய காலச் செயற்பாட்டிலும் பின்னடைவுக்குள் மூழ்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை ஆசிய, பசுபிக் சமூக ஆய்வறிக்கை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.வறுமையை ஒழிப்பதிலும், பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதிலும், மோசமான யுத்தங்கள் மற்றும் அழிவுகள், மோதல்களில் இருந்து மக்களை மீட்பதிலும் கொழும்பில் மாறி மாறி வரும் அரசுகளுக்குத் திறமையோ, திராணியோ, தகுதியோ இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுப் போக்குகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.பாணின் விலை விரைவில் நூறு ரூபாவாவதை யாராலுமே தடுக்க முடியாது என்று கைவிரிப்பதைப்போல நுகர்வோர் விவகார அமைச்சரே உறுதிப்படுத்துகின்றமை கொழும்பு அரசின் திறமையின்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றமையே இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்குக் காரணம் என இலங்கை அரசு கூறும் சமாளிப்புகள் அப்பட்டமான பொய் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.நல்லாட்சிக்கான அரசு ஒன்று கொழும்பில் ஏற்படாதவரை இனப்பிணக்கையும், பூசலையும், பேரினவாத வெறியையும், யுத்தத் தீவிரத்தையும் வளர்த்து, அதில் அரசியல் ஆதிக்கக் குளிர்காயும் தற்போதைய தலைமைகள் மாறும்வரை இத்தகைய பொருளாதாரப் பாதிப்புப் படுகுழியில் இருந்தும் நாடு விடுபடுவது துர்லபமே.

இலங்கையின் பத்திரிகை ஓன்றின் ஆசிரியர் கட்டுரையாக வெளி வந்திருந்தது மேலே இருக்கிற விடயம் ...

அப்பாடா ஒரு வழியா இதையும் எழுதிவிட்டியள் என..., குறை நினையாதையுங்கோ நான் கிரமமாக உங்கடை செய்திகளை படிக்கிறயில்லை அதாலைதான் இப்படிச்சொல்கிறேன்.

இனி என் புலம்பல் இலங்கையின் சகோதரங்களுக்கு...

பொருளாதார பின்னடைவுக்கு என்ன காரணம் எண்டு நல்லா தெரியும்தானே பிறகென்ன கறுமத்துக்கு திரும்பவும் அதுக்குள்ளையே கிடந்து அழுகிறியள் வெளிலை வந்து உலகத்தை பாருங்கோவனப்பா... உலகம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கு எண்டு, சும்மா செக்கு மாடு மாதிரி அதுக்குள்ளையே இருந்து அது சரியில்லை இது சரியில்லை எண்டுறதை விட நீங்கள் சிலதை செய்து பாக்கலாம் தானே?

இவ்வளவு காலம் அனுபவிச்ச உங்களுக்கே இன்னமும் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியல்லை எண்டால் அந்த அமைச்சருக்கு என்ன விளங்கும் பதவியும், சொல்லுறதுக்கான் தைரியமும் இருக்கேக்க அவர் எதையாவது சொல்லத்தான் செய்வார். ஊரில அதானே நடக்குது நீங்கள், எல்லாம் எப்ப உங்கடை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறியள் படிச்சா மட்டும் போதுமே ... அவர் இது சொல்லுறார், இவர் இது சொல்லுறார் எண்டு கதைக்கத்தான் சரி அல்லது ஆராவது ஒருத்தருக்கு பின்னால இருக்கத்தான் சரி அதுவும் இல்லையெண்டால் எங்கயாவது ஓடத்தப்பி ஒரு போர்வையோட ஒளிஞ்சு கொண்டு வால்பிடிக்கத்தானே தெரியும்...உண்மையா என்ன நடக்குது எண்டு தெரிஞ்சு கொள்கிற பழக்கமுமில்லை தெரிஞ்சாலும் அதை சொல்லுற தைரியமும் இல்லை,பிறகெதுக்கு எங்கடை ஆக்கள் அப்பிடி இருந்தினை இப்பிடி இருந்தினை எண்டு சவடால் கதைக்கிறியள் ...

நாட்டில இருக்கிற குழப்பம் தேவையில்லாதது எண்டு தெரியுதல்ல்லோ இப்பிரச்சனைகள் எல்லாத்துக்கும் காரணம் சுய லாபம் கொண்ட அரசியலும், தகுதியற்ற தலைமைகளும் தான் எண்டு தெரியுதல்லோ பிறகேன் உப்பிடியே இருக்கிறியள். வாழ்க்கையில வெளிநாட்டுக்கு போறயில்லை எண்டிருந்த பல தெற்கிலங்கை சுகோதரங்களும் 400 றியால் சாசுக்கு சவுதிக்கு போகுதுகள் நாட்டில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது ஆனா பேரினவாதம், யுத்தம், ஊழல், கேவலங்கெட்ட அரசியல், நரிக்குலத் தலைமைகள் என்று கண்ட கழிவுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியுது என உங்களுக்கு... எனக்கு வர்ற வேகத்துக்கு இனி இப்பிடி எழுதமாட்டன் ஓ... சொல்லிப்போட்டன் அப்பவும் நினைக்கிறனான் என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இதிலை எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு ஏனெண்டால் நான் இன்னொரு வலைப்பதிவு வச்சிருக்கிறன் பாருங்கோ... சரி அதை விடுவம் இப்ப இதை முடிப்பம்...

ஒரு காலத்திலயும் உது நடக்காது, முடிஞ்சால் உங்களை நீங்கள் மாத்திக்கொள்ளுங்கோ நாடு தன்னால மாறும் ஒவ்வொரு தனி மனிசனும் சேர்ந்துதான் ஒரு குடும்பம், ஓவ்வொரு குடும்பமும் சேர்ந்துதான் ஒரு ஊர், ஒர்வொரு ஊரும் சேர்ந்துதான் ஒரு நாடு; இது அடிப்படை தெரியுந்தானே... வீட்டுக்கொருத்தர் மாறுங்கோ நாடு தன்னால மாறும் சும்மா வெளிநாட்டுக்கு போறதும் அவை அங்க படங்காட்டுறதும் வர்ற காசிலை பாதி வயித்தை கழுவிக்கொண்டு சாத்தின கதவுக்குள்ளை இருந்து கதைக்குறதுக்கும் பெயர் வாழ்க்கை இல்லை.

நான் இதை சொல்லுறது இந்த பதிவை வாசிக்கத் தெரிஞ்ச சகோதரங்களுக்கு மட்டும் கிடையாது, விசயத்தை விளங்கி கொள்ளத்தெரிஞ்ச எல்லா சகோதரத்துக்குந்தான். இலங்கையை பொறுத்த மட்டில ராணுவம் எண்டுறது நாட்டுக்கு வெளியில மடடும் தேவையான ஒண்டெண்டுதான் நான் சொல்லுவன், நாட்டுக்குள்ள எவர் ஆயுதம் வச்சிருந்தாலும் அது அவர் அவற்றை பயத்திலையும், தவறுகளை மறைக்கவும், சுய லாபத்துக்காகவும் தான் என்பது என் கருத்து. வன்முறை எண்டுற கொடுமையால எதையும் சாதிக்க முடியாது. அற்புதமான தீவு, வாழுறதுக்குரிய எல்லாம் இருக்கு ஆனா வாழத்தான் தெரியயில்லை எங்கடை கறுமங்களுக்கு!

பாணைப்பற்றி கதைக்கேக்கை ஆது சம்பந்தமா நான் மனசில நினைக்கிற விசயங்கள் கனக்க அது இன்னொரு பதிவில சொல்லுறன் சும்மா கதைக்கிறதை விட நீங்கள் மாறுங்கோ "எல்லோரும் மாற்றங்களை விரும்புகிறார்கள் தாங்கள் மாறுவதை அல்ல" எண்டு ஆரோ சொன்னது இந்த நேரத்தில ஞாபகம் வருகுது...

கொழும்பில காலமை குண்டு வெடிச்சா பின்னேரம் மறந்து போகுதுகள் சனம் ஏனெண்டா அங்க இருக்கிறதுகளுக்கு உதுக்கெல்லாம் நேரம் கிடையாது அவரவற்றை வேலையும் வாழ்வும் முக்கியம் வன்னிக்கை நடக்கிறதைப்பற்றி வாசிக்க முடிந்தாலும் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை பேராதனையில் படிக்கிற பெடியளுக்கு வீட்டில என்ன, படிச்சமா, fun எடுத்தமா, நாலு பேரோட பழகினமா, வேலை தேடி வெளிநாட்டுக்கு போனமா எண்டு இருக்குதுகள் இளசுகள்.

தெளிவான நாகரிகமும் திறைமையும் மிகுந்தவர்கள் இலங்கையர்கள என்பது மற்றய நாட்டுக்காரர்களின் அபிப்பிராயம் ஆனால் நாட்டுக்குள்ள நடக்கிறதை பார்த்தால் அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் போலயெல்லோ கிடக்கு... சும்மா வீண் விதண்டாவாதங்களில காலத்தை விடாம பரஸ்பரம் ஒவ்வொரு தனி மனிதனும் மாறுதலும் புரிந்து கொள்ளுதலும் அவசியம் எண்டுதான் எனக்குப் படுகிறது...

ஏன் கடந்த காலங்களை சொல்லிச் சொல்லி நிகழ் காலத்தை இழக்க வேண்டும் 2003 இல பிறந்ததுக்கு என்ன தெரியும் 70 இல இருந்து பிறந்ததுகளில பாதி கெட்டு சீரழிஞ்சு போட்டுதுகள், போதாதெண்டு எதுக்கிந்த கொலை வெறி; வேண்டாம் புன்னகையும் வாழ்த்துக்களும் எந்த விதமான செலவும் இல்லாமல் மற்றவாகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரும் செல்வங்கள் அவற்றை மனதார வழங்குவோம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு...