மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1

கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில இருந்து குறைஞ்சது ஒரு ஐந்து பதிவெண்டாலும் போடலாம் குடும்பம் காதல் வேலை சம்பளம் என்பதோடு கலாச்சாரம் வாழ்வியல் மனிதர்கள் சூழ்நிலை என பல விசயங்களை எழுதி என்ரை மண்டைய காய வைச்சுப்போட்டான் ( அதுல அவனுக்கென்ன சந்தோசமோ பாவம் அனுபவிச்சுட்டுப் போகட்டும்) இதெல்லாம் போதாதெண்டு Phone எடுத்து “பதிலைப் போடடா கடைசி” எண்டு தொடங்கி குடுத்தான் ஒரு பிரசங்கம் பாருங்கோ அது தனி பதிவிலை போடலாம் கெட்ட வார்த்தைகளை சந்தோசமாக பயன்படுத்துவது எப்படி என்றுஆனாலும் அதுகளை வாசிச்ச பிறகுதான் தெரியுது மத்திய கிழக்குல என்ன நடக்குதெண்டு இனி கொஞ்சம் அவன் கடிதங்களில் இருந்து


மச்சான் எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இருந்துதானே ஆகவேண்டும் அதை விடு ஆனால் நீ அடிக்கடி கடிதம் போடு நான் இங்கே இருப்பதற்கு அவைதான் வேண்டும் நான் உங்களை எல்லாம் இழந்துவிட்டிருக்கிறேன் என்கிற உணர்வே எனக்கு வரக்கூடாது அதற்காகவேனும் முடிந்தவரை ஊரில் நடக்கும் விசயங்களை எனக்கு எழுது என…இங்கே நான் இருக்கிற இடத்தில் இ 21 இலங்கை ஆட்கள்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் கிழக்கிலங்கை முஸ்லீம்கள் என்னுடைய அறையில் நீர்கொழும்பு மனோஜ் மட்டக்களப்பு றொட்ணி பொத்துவில் ஷெயனுதீன், ஷரிவுதீன் என மொத்தம் 5 பேர் இருக்கிறோம் ஆனால் நான் இருப்பது ஒரு Camp Accommodation, இதிலை பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் துருக்கி என்று கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கிறம். சாப்பாட்டுக்கு நான் கவலைப்பபடுபவன் கிடையாது அது எனக்கு இருந்தால் போதும் ஆனாலும் ஒரு கூட்டத்துக்கு சமைப்பது போல தான் சாப்பாடு இருக்கும், சவுதிக்கு வந்ததில் முதல் செத்தது நாக்கு மச்சான். விமானம் ஏறும் பொழுதே நான் செத்துப்போனேன் என்பது வேறுவிடயம் அவள் இல்லாத இடத்தில் எனக்கெப்படி உயிர் இருக்கும் சரி அது பற்றி பிறகு எழுதுகிறேன் ஆனால் அது சம்பந்தமாக இப்ப கதைக்கிறதே ஒரு சுமை போலவும் சுகம் போலவும் இருக்கு சரி சரி இப்ப இதை நிப்பாட்டி வைப்பம்.

எனக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஒரு வாழ்வியல் முறைக்குள் வந்து மாட்டிக்கொண்டேன் என்பது சுருக்கமாக சொல்லும் என்னுடைய நிலமை ஆனால் எனக்கு இங்கு பல விடயங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது நிறைய விசயங்கள் புரியாமலும் இருக்கிறது...

குளிக்கிறதுக்கு பொதுவான குளியலறைகள் தான் நீளமாக வரிசையாக கட்டியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் குளியலறை ஒரு பக்கத்தில் கழிவறை என்று இருக்கும் அனேகமாய் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வேலை என்கிற படியால குறிப்பிட்ட நேரங்களில் அதுக்குள்ள போகவே முடியாது நான் முடிந்தவரை முதல் அல்லது தனியான நேரத்தில் போய்க்கொள்ளுவேன். அதெல்லாம் பறவாயில்லை ஆனால் இங்கே இருக்கிற மனிதர்களை புரிந்து கொள்வதுதான் பெரிய கஷ்டம் மச்சான் ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு மாதிரி பார்க்கலாம் போகப்போக ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளலாம் .......ஆனால் இவர்கள் எப்படியான நம்பிக்கையில் சவுதிக்கு வந்தார்கள் என்று பலரைப்பார்த்து வியந்திருக்கிறேன் ஆனால் அவர்களையும் குறை சொல்ல முடியாது அரவரவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ இங்கேயும், வீட்டிலும், இவர்களுக்குள்ளும் இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கும் வலிய யாரும் போவதுமில்லை அதே நேரம் மனதளவில் நெருங்குவதுமில்லை விலகுவதுமில்லை அவசரத்துக்கு உதவி செய்யாமலும் இல்லை.

ஒரு விதமான... இயல்பும் இல்லாத, இருத்தலும் இல்லாத நாட்கள் மட்டுமே நகருவதாகிய வாழ்வியல்தான் இங்கே இருக்கிறது... மொத்தத்தில் எனக்கும் என் வாழ்க்கை முறைக்கும் சற்றும் பொருந்தாத இடத்தில் இப்பொழுது இருக்கிறேன். நான் கொண்டு வந்த அக்கினிச் சிறகுகளை இது வரை எத்தனை முறை வாசித்தேன் என்று என்கே தெரியவில்லை மிக முக்கியமாய் புத்தகங்கள் என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்கிறது... இன்னும் மூன்று வருடங்கள் எனக்கு வீணாகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.....

நான் என்ன மாதிரியானவன் என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இது எனக்கு கிடைத்திருக்கிற தண்டனையும் நரகமும். எனக்கான உலகத்திலிருந்து நான் மிகத்தெலைவிலான ஒரு தண்டனைத்தீவில் தனித்து விடப்பட்டதாகிய உணர்வுதான் எனக்கு இப்பொழுது இருக்கிறது. இரவுகள் மிக நீளமாய் தூக்கத்திற்கு எதிரான ஊசி மருந்துகளை நிமிடத்திற்கொருமுறை முறையற்று குத்திக்கொள்வதைப்போல நித்திரை என்பது என்னோடு பகைத்திருக்கிறது. ஆனாலும் நான் இங்கே இருந்துதானே ஆக வேண்டும் நம்முடைய நிலமை அப்படித்தானே இருக்கிறது....நல்ல வேளை இலங்கை எனக்கு எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழ்வதற்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறது... நானெல்லாம் நெளிநாடு வருவேன் அதுவும் சவுதிக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்ன செய்ய இலங்கையின் கேவலமான அரசியலும் தேவையில்லாததுமான யுத்தமும் ஊரில் ஒழுங்காக வேலை செய்ய முடியாத வகைக்கு ஆக்கி விட்டிருக்கிறது.

நாம் நினைத்தோமா இப்படி திடீரென்று எல்லோரும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுவோம் என இல்லையே... மச்சான் எனக்கு இப்ப இருக்கிற கோபம் எல்லாம் இலங்கையில் தேவையில்லாத ஒரு யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிற எல்லோரிலையும்தான் இது விடுதலைக்கான போராட்டம் போல இல்லை மச்சான் ஒரு வெறும் அரசியலாகத்தான் எனக்கு படுகிறது இப்ப இலங்கையில் இருக்கிற தலைமுறைக்கு இந்த அரசியலும் தெரியாது இன வேறுபாடும் தெரியாது ஏன் நானே நாட்டில வேலை செய்தது சிங்களப் பெடியளோடதானே. அரசியல்வாதிகள் தான் பழைய கதைகளையும் இல்லாததையும் சொல்லிச்சொல்லி நாடடை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகள் வேடிக்கை பார்ப்பதோடு தங்களுக்கான வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றன... இதை எழுதினால் கடிதம் இப்ப முடியாது.... அடுத்த கடிதத்தில் மிகுதி அனுபவங்களை எழுதுகிறேன் தற்காலிகமாக இப்ப முடிக்கிறேன் மொத்த ஊரையும் சுகம் கேட்டதாக சொல்...

சந்தோசம் வாழவின் பலம்...

அன்புடன்
உங்கள்...

0 comments: